ஈரோடு: ஈரோட்டில் சுமை தூக்கும் வேலை செய்து வருபவர் சந்தோஷ். இவர் கடந்த மாதம் தனது நண்பர்களுடன் ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்த சென்றுள்ளனர். பண்ணையார் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த தனியார் பார் கனகராஜ் என்பவருக்கு சொந்தமானது. சந்தோஷ் அந்த பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருக்கும் போது அவரது செல்போன் காணாமல் போய் உள்ளது.
காணாமல் போன செல்போன் குறித்து சந்தோஷ் பாரில் வேலை செய்த ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு பார் ஊழியர்கள் டிப்ஸ் வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் செல்போன் கிடைக்கும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சந்தோஷுக்கும் பார் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பார் ஊழியர்கள் தாக்கியதில் சந்தோசின் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
அதில் சந்தோஷின் வலது கண் படுமோசமாக காயமுற்றதால் அவர் கண்பார்வையை இழந்துள்ளார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பார் உரிமையாளர் கனகராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊழியர்கள் மீது மட்டுமே சாதாரண அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 'குப்ரோ நிக்கல்' திருட்டு: 10 பேர் கைது!
இதனால், கண் பார்வை இழந்த சந்தோஷ் நேற்று (ஜூன் 19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பார் உரிமையாளர் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும், கண்பார்வை இழப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் எனவும் குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சந்தோஷ் உட்பட சுமார் 50- க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிளார்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தனியார் பார் உரிமையாளர் கனகராஜ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின் காவல் துறையினரின் அறிவுறுத்தலில் பேரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "உயிருக்கு பாதுகாப்பு வேணும்" - திருச்சி திமுக ஒன்றிய செயலாளர் மீது பரபரப்பு புகார்!