ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் புஞ்சை பாலத்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணி (35). இவரின் கணவர் விஜயகுமார் திமுக நிர்வாகி. அதிமுகவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி சத்யபிரியா (31) ஊராட்சி துணை தலைவராக உள்ளார். வெவ்வேறு கட்சி என்பதால், நிர்வாகம் செய்வதில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருவருக்கொருவர் முரண்டு பிடிப்பதால், மூன்று நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்துள்ளனர். இந்நிலையில், சத்யபிரியா வீட்டுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணி கடந்த பிப்.22ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அலுவலகத்துக்கு ஏன் வருவதில்லை, கையெழுத்து போடுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் அங்குள்ள மக்களிடம், தண்ணீர் வராமல் போக சத்யபிரியா தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து மல்லுக்கட்டியுள்ளனர். தகாத வார்த்தைகள் பேசியபடி நீடித்த குடுமிப்பிடி சண்டை, ஐந்து நிமிடங்கள் வரை நீண்டது. அங்கு குவிந்த மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, இருவரும் சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை காவல்துறையினர் துணைத் தலைவர் சத்தியபிரியா, அவரது கணவர் சுப்பிரமணி ஆகிய இருவர் மீதும் 294 பி, 341, 323, 506 (1), ஆபாசமாக பேசுதல், முறையற்று நடத்து கொள்ளுதல், காயப்படுத்துதல், கொலைமிரட்டல், ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் துணை தலைவர் சத்திய பிரியா கொடுத்த புகாரின் பேரில், தலைவர் தங்கமணி, அவரின் உறவினர் சசிக்குமார், சசிக்குமார் மனைவி பவிதா ஆகிய மூன்று பேர் மீதும் 294,323, 506 (1), ஆபாசமாக பேசுதல், முறையற்று நடந்துகொள்ளுதல், கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குடுமிபிடி சண்டை குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களும் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியருக்க அறிக்கை அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மக்கள் சிலர் கருத்து தெரிவித்த போது, தலைவர், துணை தலைவர் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் தனியாக மனு அனுப்ப உள்ளோம் என்றனர்.
இதையும் படிங்க: ஹரியானா பட்டாசு ஆலை விபத்தில் மூன்று தமிழர்கள் உயிரிழப்பு!