ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஏ.ஜி.வெங்கடாசலம். இவர் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28 ) நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செயதார். இதற்காக புதன்கிழமை இரவு அந்தியூரில் இருந்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு தனது காரில் சென்றுள்ளார்.
காரை அவரது ஓட்டுநர் கார்த்திக் என்பவர் ஓட்டியுள்ளார். மேலும் அவருடன் முருகன் (திமுக உறுப்பினர்) என்பவரும் சென்றுள்ளார். புதன்கிழமை (ஜுலை 27)இரவு 11.21 மணி அளவில் பவானி அருகே உள்ள வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு விலா எலும்பு மற்றும் தோல்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது நலமுடன் உள்ள அவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தாரிடம் எம்எல்ஏவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் உடன் சென்ற முருகன் ஆகிய இருவருக்கும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்குள்ளான சிசிடிவி :இதனிடையே எம்எல்ஏவின் கார் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது . அதில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீலாக கவிழும் காட்சி பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:வாகன விபத்தில் சிக்கிய அந்தியூர் எம்எல்ஏ - தனியார் மருத்துவமனையில் அனுமதி!