ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இரியபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின்கீழ் 20 குடும்பங்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.
தரமற்ற கட்டுமானத்தால் இந்த வீடுகளின் மேற்கூரை கான்கிரீட் காரைகள் பெயர்ந்து எப்போதுவேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாய நிலையில் இருந்தது. மேலும் வீடுகளின் மேற்கூரையில் கம்பிகள், எலும்புக்கூடு போல் வெளியே தெரிந்தது.
இந்நிலையில் நேற்று (பிப். 22) காலையில் திடீரென வீட்டின் மேற்கூரை, கான்கிரீட் தளங்கள் இடிந்து விழுந்தது. விபத்து நடக்கும்போது நல்வாய்ப்பாக வீட்டின் உரிமையாளர் துளசி (45), அவரது மகன் நரசிம்மன் (25) ஆகிய இருவரும் வீட்டின் வெளியே இருந்ததால் உயிர் தப்பினர்.
பழுதடைந்த வீடுகளை சரிசெய்து தரக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் வீடு இடிந்துவிழக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
![இடிந்து விழுந்த தொகுப்பு வீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-sathy-group-housing-photo-tn10009_23022021092303_2302f_1614052383_57.jpg)
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இப்பகுதி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது இதே போல் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளதாகவும், விபத்து நிகழும் முன்பு சீரமைத்துத் தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தொகுப்பு வீடுகள் கட்டித்தராததால் மலையில் குடியேறிய பட்டியலின மக்கள்!