ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பவானிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் தெற்கு சுற்றுச்சுவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. தொடர்ந்து, அங்கு மண் கொட்டப்பட்டு சுவர் பலப்படுத்தப்பட்டது.
பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் உள்ள கோயிலின் அடிப்பாகத்தில் இருந்த மண் முழுவதும் வலுவிழந்து காணப்பட்டது. இதனிடையே, தெற்கு பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதனால் கோயிலின் தெற்குப் பிரகார சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்த 63 நாயன்மார்களின் சிலைகள் முழுவதும் சேதமடைந்தன.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கோயில் பிரகாரம் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சாத்தப்பட்டது. கடந்த ஓராண்டாக கோயில் செயல்படாத நிலையில் தற்போது மீண்டும் கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள ஈரோடு அறநிலையத் துறை பொறியாளர் எஸ்.முத்துசாமி, சரவணன் முருகன் மற்றும் கோயில் திருப்பணி குழு கமிட்டியினர் ஆய்வு செய்தனர்.
நவீன முறையில் கோயில் சுற்றுச்சுவர் எழுப்பி மீண்டும் கோயில் திருப்பணிகள் தொடங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருப்பணிக் குழுவினர் தெரிவித்தனர். இந்த ஆண்டுக்குள் திருப்பணி நிறைவேற்று வழக்கமான பூஜைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்துக்களை மீட்டு மக்களிடம் கொடுப்போம்- உதயநிதி