ஈரோடு: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தை அதிமுக கோட்டையாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் தனிச் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.எல்.சுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் கு.சங்கீதா, மக்கள் நீதி மய்யம் சார்பில் கார்த்திக்குமார் மற்றும் தேமுதிக சார்பில் ஜி.ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் ஒரு சுயேட்சைகூட போட்டியிடவில்லை. இதனால் அதிமுகவின் வெற்றிக்கு அமைச்சர் செங்கோட்டையனே களமிறங்கி பல்வேறு கட்சியினரை அதிமுக பக்கம் இழுத்து வருகிறார்.
இதற்கிடையே பவானிசாகர் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 300 பேர் புங்கம்பள்ளியில் நடந்த இணைப்பு விழாவில் அதிமுகவில் சேர்ந்தனர். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் சேர்ந்த ரஜினி ரசிகர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பவானிசாகரில் செயல்பட்ட ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது.