ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயைப் பிரிந்த மூன்று மாதமே ஆன யானைக் கன்று மலைப் பகுதியில் சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட வனத் துறையினர் அதனை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
இதையடுத்து, அந்த யானைக் கன்று மீண்டும் ஆசனூர் கிராமப் பகுதியில் நுழைந்தது. தொடர்ந்து வனத்துறையினர் நேற்று இரவு அதனை மீட்டு வன கால்நடை மருத்துவ மையத்திற்கு கொண்டுவந்தனர்.
தற்போது அந்த யானைக் கன்றுக்கு புட்டி பால் அளித்து அதன் உடல்நிலையை வனத் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதனை பரிசோதித்த மருத்துவர்கள், ஆரோக்கியமாக உள்ளதாகக் கூறினர். உயர் அலுவலர்களின் ஆலோசனைக்குப் பின் யானைக் கன்றை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.