ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூரைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பவானிசாகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், ஈஸ்வரனின் வாயில் துணியை கட்டி கடத்திச் சென்றது. மேலும் அவரை அடித்து உதைத்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த ரூ.1.50 கோடி பணத்தை பறித்துச் சென்றனர். இதனையடுத்து புஞ்சை புளியம்பட்டி காவல் துறையில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
இதனிடையே காயமடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் கடத்தல் தொடர்பாக, சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன், மோகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது கடத்தல் கும்பலிடம் இருந்த கார்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன், ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
எனவே இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட புளியம்பட்டி காவல் துறையினர், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதற்கான உத்தரவு நகலை கோவை சிறை அலுவலர்களிடம் புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவிலும் வாரிசு அரசியல் செய்யுங்கள்... கே.என். நேரு தடாலடி..