ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் நீராதாரமாகவும் 2 லட்சத்து 7ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்பெறும் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றும் பவானிசாகர் அணைக்கு இன்று 66 வயது நிறைவடைகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறு, மாயாறு கூடுமிடத்தில் அணை கட்டி, மழை காலத்தில் வரும் தண்ணீரை சேமித்து வைத்து வறட்சி காலத்தில் பாசனத்துக்கு பயன்படுத்தும் திட்டம் 1947ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
அப்போதைய காலத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்கு பவானி திட்டம் என பெயரிடப்பட்டு பூர்வாங்கப் பணி தொடங்கப்பட்டது.
சாகுபடி பணிகள்
இப்பகுதியில் உணவு பஞ்சத்தை போக்குவதற்கு அணையின் வலது பகுதியில் 124 மைல் நீண்ட கால்வாய் வெட்டி முன் பருவத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கரில் நெல்,வாழை,மஞ்சள் பயிரிடவும், பின் பருவத்தில் கடலை, எள், பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய பணிகள் தொடங்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்து முதல் 5 ஆண்டு திட்டத்தில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ரூ.10 கோடி செலவில் அணைக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 1955ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஷட்டர்களால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
வீட்டுக்கு ஒருவர்
அணை கட்டுமான பணியில் வீட்டுக்கு ஒருவர் ஈடுபட்டனர். அணையின் மத்தியில் 1523 அடி கொண்டு கருங்கல் கட்டடமும், இடது புறத்தில் 3 மைல் மற்றும் வலது புறத்தில் 3.5 மைல் என மொத்தம் 5.5 மைல் தூரத்துக்கு மண் கரைகள் அமைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணையாகவும் தமிழ்நாட்டில் அதிக கொள்ளளவு கொண்ட இரண்டாவது மண் அணை என சிறப்பை கொண்டுள்ளது பவானிசாகர் அணை.
நீர் வெளியேற்றம்
கடல் மட்டத்தில் இருந்து 800 அடி உயரத்தில் அணை உள்ளது. 15 அடி உயரத்தில் 9 ஆற்று மதகுகள் உள்ளன. 85 அடி உயரத்தில் வெள்ள காலங்களில் வெள்ளநீர் வெளியேற்றுவதற்கு 9 மிகை நீர் போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை அணை நிரம்பியபோது இந்த மிகை நீர்போக்கிகள் மூலம் அதிகபட்சமாக 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் வறட்சி நிலவிய காலத்தில்கூட இந்த அணையால் தண்ணீர் பிரச்னை இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றும் இந்த பவானிசாகர் அணை 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இதே நாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இன்றுவரை 27 முறை 100 அடியும் 19 முறை 102 அடியும் முழுகொள்ளளவான 105 அடியை 6 முறையும் எட்டியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை கட்டுமானப் பணியை அப்போதைய பிரதமர் நேரு, சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி போன்ற தலைவர்கள் பார்வையிட்ட பெருமையும் அணைக்கு உள்ளது.
இதையும் படிங்க : கமல் ஹாசன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சுஹாசினி