ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், எலத்தூரில் குடிமராமத்துப் பணியின் மூலம் தூர்வாரப்படும் குளத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதத் தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டடியல் பெறப்பட்டப் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்.
மதிப்பெண் பட்டியல் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. சூழ்நிலையைப் பொறுத்து பருவத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து அரசு முடிவு எடுக்கும். தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவது தொடர்பாக, இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் தயாராகும். புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியாகும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு அமலிலிருக்கும் பகுதிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு!