ஈரோட்டில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பீகாரை பின்பற்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் அங்கு கள்ளுக்கடைகளுக்கு தடைவிதிக்கவில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த தடை நீடிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி. கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் விதமாக வருகின்ற 2020ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கப்படும்.
விவாசயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயும் தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது விவசாயிகளின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விடுக்கும் சவால் ஆகும்.
கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் துணைப்பொருளான மொலாசசை மூலப்பொருளாகக் கொண்டு மதுபானம் தயாரிப்பதை விடுத்துவிட்டு, அவற்றிலிருந்து வாகன எரிபொருளான எத்தனால் தயாரிக்க முன்வர வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளே என வந்து வாதிட்டு நிரூபிப்போருக்கு 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 21 நாள்களாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி