திண்டுக்கல் நாகல்நகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது அதே நிறுவனத்தில் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவரைக் காதலித்துவந்துள்ளார்.
இதனையடுத்து அசோக்கின் சித்தி ஏற்பாட்டில் சேலத்தில் ரம்யாவுக்கும் அசோக்குக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இருவரும் சேலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவுசெய்து சென்னையில் வாழ்ந்துவந்தனர்.
இதனிடையே அசோக்கின் மாமா அண்ணாமலை, விஜயகுமார் இருவரும் அசோக் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகக் கூறி அவரை சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்துள்ளனர்.
அதன்பின் அசோக்குடன் எந்தத் தொடர்பும் இல்லை. இந்நிலையில் அசோக்கிற்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ரம்யாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் ரம்யா திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவரை அவரது பெற்றோரிடமிருந்து மீட்டுத் தரும்படி புகார் அளித்தார்.
ஆனால் ரம்யாவின் புகார் குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று (நவம்பர் 7) ரெட்டியார்சத்திரம் முத்துரான்பட்டியில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு ரம்யா சென்றார்.
அப்போது ரம்யாவை அசோக்குமாரின் தாயார் ராஜாத்தி, அவரது தந்தை அருணாச்சலம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக ரம்யாவின் உறவினர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.