திண்டுக்கல்: சின்னாளபட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 15ஆம் தேதி அன்று ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இருவர், ஆசிரியர்கள் தங்களைத் ஜாதி பெயரைக் கூறி தரக்குறைவாகத் திட்டியதாக கூறி பள்ளி வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து புகார் மனு எழுதிக் கொடுக்கப்பட்டது. அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். அந்த புகார் மனுவில் சம்பந்தப்பட்ட பள்ளி மீதும் பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் நேரில் வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து புகாருக்குள்ளான பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், சிறுபான்மையினர் அதிகாரிகள், நன்னடத்தை அலுவலர், வட்டாட்சியர், 5-டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.