திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள புலிகேசி பட்டி, ஆடலூர், பன்றிமலை அதனைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அழகுமடை, மூனாண்டிபட்டி, பெரிய ஊர், பல்லத்து கால்வாய், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் பலியர் இன மக்கள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பிரதான தொழிலே விவசாயம்தான்.
இங்கு வசிக்கும் மக்கள் வனவிலங்குகளால் தாக்கப்பட்டால் மலை பகுதியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்ப்பகுதியில் உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு, வாகன வசதி இன்றி மருத்துவம் பார்க்க செல்வதால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதே போல் இங்கு பேருந்து வசதி, குடிநீர் வசதியும் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், கடந்த 10 தினங்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் தவிக்கிறோம். இருக்கின்ற நீரை சேமித்து வைத்து அதை பருகி வருவதால் குழந்தைகள், முதியோர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
எனவே மருத்துவர்கள், பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்துத்தர பலமுறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மூலமாகவும், நேரடியாகவும் சென்று மனு அளித்தோம். ஆனால், இதுவரையில் மலைவாழ் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்துத்தர மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. அதேபோல் சுகாதார நிலையங்களில் போதிய வசதியில்லாமல் பாழடைந்த கட்டடம்போல் காட்சியளிப்பதால் செவிலியர்கள் வரமறுக்கின்றனர். இதனால் மலைவாழ் மக்கள் இங்கு உள்ள மருத்துவரை பார்க்க முடியாமல் தினமும் 60 முதல் 70 கிலோ மீட்டர் சென்று மருத்துவரை சந்திக்கக் கூடிய அவலம் ஏற்படுகிறது.
எனவே மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இங்குள்ள மக்களுக்கு மருத்துவத்தையும், முறையான குடிநீர் வசதியும் அவசியம் ஏற்பட்டு தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.