மயிலாடுதுறை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆண்டுதோறும் மயிலாடுதுறை மாவட்டமான திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும்.
இந்த நிலையில், இன்று (ஜன.17) காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு 44வது ஆண்டு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குதிரை மற்றும் மாட்டு வண்டிக்கார வீரர்கள் கலந்து கொண்டனர்.
முதல் போட்டியாகச் சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தொடங்கியது. போட்டியினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடி அசைத்துத் துவங்கி வைத்தார்.மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு என மூன்று பிரிவுகளுக்கும், குதிரை வண்டிகளுக்கான கரிச்சான் குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் மாலை 4 மணி வரை ரேக்ளா ரேஸ் நடைபெற்றது.
இதில், வெற்றி பெரும் முதல் மூன்று மாடு, குதிரை மற்றும் வீரர்களுக்கு ரொக்க பரிசுகள், சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும். பாரம்பரியம் மிக்க திருக்கடையூர் ரேக்ளா ரேஸை காண்பதற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் 5 கி.மீ தூரத்திற்குச் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகழித்தனர்.
இந்த பந்தயத்தில் நடுமாடு பிரிவுக்கான போட்டியின் போது இரண்டு மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், கவிழ்ந்த ஒரு மாட்டு வண்டி அதன் ஜாக்கி இல்லாமலே எல்லை நோக்கி அதி வேகமாக சிறி பாய்ந்து சென்றது. மேலும், இந்த பந்தய போட்டியில் ஏராளமானோர் பார்வையாளர்கள் வீரர்கள் கலந்து கொண்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மதுரை ஆயி பூரணம் அம்மாளை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!