திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ரித்திகா ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு முடித்து விட்டு கரோனா விடுமுறையில் உள்ளார்.
இவருக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவி ரித்திகா தன்னுடைய பெற்றோரிடம் ஆன்லைன் வகுப்பிற்காக புதிய செல்போன் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளனர். இதனால் ரித்திகாவிற்கும் அவருடைய தாயாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இறுதியில் ரித்திகாவை அவருடைய தாயார் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரித்திகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித்தராத காரணத்தால் ஏற்பட்ட பிரச்னையில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.