திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக் கோயிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சாமி தரிசனத்திற்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்கும் சூழலும் உருவாகிறது.
எனவே, பழனி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 300 ருபாய் கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) நடைமுறைப் படுத்துவதற்கான திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் குறித்து பக்தர்கள் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை வழங்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயிலில் முக்கிய பிரமுகர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோர் எளிதில் சாமி தரிசனம் செய்திட பக்தர்கள் வசதிக்காக பத்து ரூபாய் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசன வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் 2023 மற்றும் 2024 ஆண்டு அறிவிப்பு எண் 85 பக்தர்கள் பெரும் அளவில் வருகை தரும் திருக்கோவில்களில், தினசரி ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசன வசதி (பிரேக் தர்ஷன்) ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், சுவாமி தரிசன செய்ய வருகை தரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கு தினசரி மாலை 3 மணி முதல் 4 மணி வரை இடைநிறுத்த தரிசனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், கீழ்க்கண்ட விபரப்படியான தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, அக்னி நட்சத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கில வருட பிறப்பு, தை ஒன்று முதல் ஐந்து வரை தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா, மாதாந்திர கார்த்திகை உள்ளிட்ட 44 திருவிழா மற்றும் விசேஷ நாட்கள் தவிர்த்து பக்தர்கள் ஒருவருக்கு 300 ரூபாய் கட்டண சீட்டில் இடைநிறுத்த தரிசனம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடைநிறுத்த தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் ஒன்று, தேங்காய், பழம், விபூதி மற்றும் ஒரு மஞ்சள் பை வழங்கப்படும் எனவும் புதிய அறிவிப்பு குறித்து பக்தர்கள் தங்களுடைய ஆட்சேபனை மற்றும் ஆலோசனை இருப்பின் அடுத்த மாதம் 16/06/23 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்கும் வகையில் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருக்கோயில் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் வைக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: 429 மனுக்களில் 75 மட்டுமே ஏற்பு.. செய்யாறு எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை!