திண்டுக்கல்: பூலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதந்திரபோராட்ட தியாகி ராமசாமியின் மகன் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொடைக்கானலில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகையை அப்போதிருந்த ஒன்றிய அரசு அதிகாரி (ஐ.ஏ.எஸ்) ஒருவர் தனது பினாமிகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனத்துறைக்கு சொந்தமான அந்த நிலத்தை மீட்டு அரசுக்கு ஒப்படைக்குமாறு வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் அந்த நிலம் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், என்மீது சம்மந்தப்பட்ட அலுவலரின் வற்புறுத்தலின் அடிப்படையில் பொய்யான நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கப்பட்டன.
அந்தப் புகார்களின் அடிப்படையில் என்மீது தாண்டிக்குடி போலீசாரால் கைது நடவடிக்கை எடுத்தனர். ஆசிரியராக பணியாற்றும் எனது மனைவி, தாய், மாமியார் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனது மனைவியை எந்தக் காரணமும் இல்லாமல் வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்தனர். பொதுநல வழக்கு தொடர்ந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை மன ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.
நான் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தரப்பட்டது. நீதித்துறை நடுவர் முன்பு விசாரணைக்கு ஆஜரான நேரத்தில் நான் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட எஸ்பி, இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், திண்டுக்கல் தாசில்தார் உள்ளிட்டோர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு எனக்கு பெரும் மன உளைச்சலையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். எனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஆட்சி காலத்தில் பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தன் மீதான வழக்கு ஆவணங்களை திண்டுக்கல் மாவட்ட எஸ்பி விசாரணை செய்யாமல், வேறு உயர் அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: செல்போன் கொடுக்க மறுத்த சகோதரி கொலை - பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்