கரூர்: காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும்வகையில், நாள்தோறும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்பட்டுவருகின்றன.
இதனிடையே, கரூர் தான்தோன்றிமலை அருகேவுள்ள முத்தலாடம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்குச் சொந்தமான பழைய லாரி உதிரிபாக கடை கரூர்-ஈரோடு சாலையில் செயல்பட்டுவருகிறது.
அங்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் கடைக்குள் புகுந்து, லாரி உதிரிபாகங்களைத் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஜேசிபி ஓட்டுநர் இதனைக் கண்டு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.
இருவர் கைது
உடனடியாக அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் இருந்த கரூர் நகர காவல் துறையினருக்குத் தகவல் கிடைக்க, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். அங்கு, பழைய லாரி உதிரி பாகங்களைத் திருடிக் கொண்டிருந்த இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவையைச் சேர்ந்த செல்வகுமார் (29), கரூர் ஆண்டான்கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் குற்றச் சம்பவங்களை விரைவில் தடுக்க ஈ-பீட் செயலி அறிமுகம்