திண்டுக்கல்: பழனியில் ஆளுநர் வருகையின்போது கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளதாகக் கூறி காவல் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல் துறையினர் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பழனி மலைக்கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி , திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோல, தமிழக ஆளுநர் ரவியை வரவேற்க பாஜகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் வருகை தந்தனர். அப்போது பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜை காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது, பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக காவல் துறையினர் பாஜகவினரையும் மற்றும் கருப்புக்கொடி காட்ட முயன்ற INDIA கூட்டணியைச் சேர்ந்த கட்சியினரையும் கைது செய்து தனித்தனியே திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் கம்யூனிஸ்ட் ,விடுதலை சிறுத்தை கட்சி, திராவிடர் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 90 பேர் மீதும், பாஜகவினர் 117 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சில நாட்களுக்கு முன்பு சிவில் பிரச்னையில் சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலையத்தில் வரவு செலவு பஞ்சாயத்து செய்வது, மாவட்டம் முழுவதும் கொடிகள் கட்ட அனுமதித்தாலும் பழனியில் தடைச் சட்டம் போட்டது, பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக சில அமைப்புகள் மட்டும் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பது, மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் அமைப்புகளின ஊர்வலத்திற்கு தடை விதிப்பது உள்ளிட்ட காவல் துறையினர் தொடர்ந்து ஜனநாயக இயக்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி காவல் துறையைக் கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையைப் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போராட்டதில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை குண்டு கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!