திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து விற்கப்படும் போதைக் காளான் என்ற மேஜிக் மஸ்ரூம் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்தே இந்த விற்பனை பெரிதும் சூடு பிடித்து வருகிறது.
இதில் பல லட்சங்கள் புழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், மேல்மலை பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் அனுமதியற்ற பகுதிகளில், போதைக் காளான் பேக்கேஜ் என்ற தங்கும் வசதியும் உள்ளதாகக் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து வெளி மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, கொரியர் மூலம் போதைக் காளான் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா அருகில் உள்ள சி.எஸ்.ஐ தங்கும் விடுதியில் பணியாளராக பணிபுரிந்த ஏசுதாஸ் மகன் சாலமோன் (53), இவரது மனைவி ஜெயந்தி (43), மகள் விக்டோரியா ராணி (28), மருமகன் அருண், சாலமோனின் தங்கை ஹெலன் மேரி ஆகியோர், போதைக் காளானை கொரியர் சர்வீஸ் மூலம் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் சாலமோனின் தங்கை ஹெலன் மேரியும், சாலமோனின் மருமகன் அருணும், வெளியூர்களில் தங்கி கொரியர் மூலம் வரும் போதைக் காளான்களை வாங்கி, அங்கு உள்ளவர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். இதை அடுத்து, இவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ததில், விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் போதைக் காளானை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கொரியர் சர்வீஸ் மூலம் விற்பனை செய்து பெற்ற ரொக்கத்தையும் கைப்பற்றினர். வெளியூர்களில் யார் யாருக்கு இந்த போதைக் காளான் விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொரியர் சர்வீஸ் மூலம் போதைக் காளான் விற்பனை செய்த சாலமோன், இவரது மனைவி ஜெயந்தி, இவரது மகள் விக்டோரியா ராணி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாகி உள்ள ஹெலன் மேரி மற்றும் அருணை தேடி வருகின்றனர். இந்நிலையில், இதே போதைக் காளான் விற்பனை வழக்கில் பள்ளங்கி பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் தங்கதுரை (32) மற்றும் இவரது உதவியாளர் நடராஜன் மகன் சுரேஷ் (56) ஆகிய இருவரையும் கைது செய்து, இவர்களிடம் இருந்து 100 கிராம் போதைக் காளானை போலீசார் கைப்பற்றினர்.
ஒரே நாளில் போதைக் காளான் விற்பனை செய்த வழக்கில் ஐந்து பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகி உள்ள இருவருக்கு வலை வீசி வருகின்றனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போக்சோ கைதி தப்பி ஓடிய விவகாரம்.. கோவை மத்திய சிறை காவலர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம்!