திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேன்மொழி சேகரே, இத்தேர்தலிலும் களமிறங்கியிருக்கிறார். ஆனால் பரப்புரைக்கு சென்ற இடமெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வந்தது.
இதனால் நிலக்கோட்டையில் வாக்கு ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம், தொகுதி முழுவதும் நிர்வாகிகள் மூலம் அதிமுகவினர் இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று பணப் பட்டுவாடா செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மானாயகவுண்டன்பட்டி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் அதிமுக கிளை நிர்வாகிகள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொடுக்கப்பட்ட பணம் முறையாக பொதுமக்களுக்கு சென்றடையவில்லை எனவும், பாரபட்சமாக பணம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறி நிலக்கோட்டை கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
இதனை அடுத்து ஒன்றிய நிர்வாகிகள், பணத்தை மக்களிடம் கொடுக்காதவர்களை அழைத்து உடனடியாக அனைவருக்கும் பணத்தை வழங்க வேண்டும் என்று கூறுவது போன்ற காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்ப்பட்டு வருகிறது.