திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவர் பேசத் தொடங்கும் போது, இஸ்லாமிய இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், இந்த கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பேசக்கூடாது, அவர் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழக்கமிட்டவாறு அவரை நோக்கி முன்னேறினர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, அடையாளம் தெரியாதவர்களால் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தால், திண்டுக்கல் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் பால்செல்வம் (50) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கொடைக்கானல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் நகர பொருளாளர் நாகராஜன், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த அப்துல் பாசித் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன், கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பற்றாகுறையால் தான் இந்த சம்பவம் நடைப்பெற்றதாக காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடக்கம்!