திண்டுக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (ஏப். 30) தேனியில் அரசு விழாவில் கலந்து கொண்டு, பின்னர் நேற்று மாலை சாலை மார்க்கமாக திண்டுக்கல் சென்றார். வழிநெடுகிலும் ஏராளமான திமுக தொண்டர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நிலக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் இருந்து திமுக தொண்டர்கள் வந்திருந்தனர்.
அதேபோல், நிலக்கோட்டை அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி கல்லடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுகவின் தீவிர விசுவாசியும், கூலித்தொழிலாளியுமான, ஆரோக்கியசாமி (60) உட்பட, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செம்பட்டி வந்திருந்தனர்.
முதலமைச்சர் அந்த வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு, சென்றபோது, தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஆரோக்கியசாமியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஆரோக்கியசாமிக்கு, ஆரோக்கியமேரி (58) என்ற மனைவியும், அருள்ராஜ் (42) ஸ்டாலின் (38) என்று 2 மகன்களும், ஞானசௌந்தரி (40) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆரோக்கியசாமியின் உடலுக்கு திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் அஞ்சலி செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் இடையே மோதல் - வைரலாகும் வீடியோ