திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட கணவாய்பட்டி, முளையூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் அம்மா மினி கிளினிக் தொடக்கவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மருத்துவர்கள், கட்சிப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "எந்த திட்டத்தை அறிவித்தாலும் எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டிக்கொண்டே இருக்கிறார். தற்போது பொங்கல் பரிசாக 2,500 ரூபாயை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கிறார்கள்.
இது ஏமாற்று வேலை என கூறுகின்றனர். திமுக ஆட்சியில் அவர்கள் இதனை செய்திருந்தால் புத்தர்கள் வாரிசு, இயேசுநாதர் வாரிசு போல கருதுவர், அதனை நாம் செய்யும்போது இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுகள் மாதிரி குறை கூறுகின்றனர்” என்றார்.
இதனிடையே வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இயேசுநாதரை சுட்டது கோட்சே என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இவரது பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாக உடையும் அதிமுக? - அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன பதில்