திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் மழை வேண்டி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு கொண்டாடப்படும் திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவர். மழை வேண்டி பிரார்த்தனை செய்தால், மழை வரும் என்பது நமது மக்களின் நம்பிக்கை. அப்படி கொண்டாடப்படும் திருவிழாக்களில் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை நேர்த்திக் கடனாக செலுத்துவர்.
இதில் கொஞ்சம் மாறுபட்ட விதமாக, வத்தலக்குண்டு அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நேற்று (செப். 27) இரவு நடைபெற்றது. வழக்கமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், தருமபுரி போன்ற பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் நேற்று (செப். 27) திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.
அதாவது, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் அமைந்துள்ள சடையாண்டி கோயிலில் இரவு திருவிழா நடைபெற்றது. அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலில் இருந்து பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, சடையாண்டி கோயிலில் இரவு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, இந்த பூஜையின் போது பக்தர்களால் நேர்த்திக் கடனாக கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.
மேலும், இந்த விழாவில் வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இந்த விருந்து நிகழ்ச்சியில் பலி கொடுக்க்கப்பட்ட ஆடுகளும் கறியாக வெட்டப்பட்டு, பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு தயாரிக்கப்பட்டது.
ஊரே மனக்கும் அளவுக்கு கமகமவென தயாரான விருந்து, நேற்று (செப். 27) இரவு துவங்கி அதிகாலை வரை மட்டுமே நடைபெற்றது. திருவிழாவில் தயாரான விருந்தை அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டனர். தற்போது அந்த திருவிழா விருந்து குறித்த வீடியோ மக்களிடையே பகிரப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: Asian Games : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்! ஆடவர் அணி அசத்தல்!