திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்க அலுவலகக் கட்டடத்தில் குடியரசு தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அகில இந்திய இளைஞர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக மாதிரி சட்டப்பேரவை நடத்தப்பட்டது.
இந்த சட்டமன்றத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி சபாநாயகராகவும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இரா. ரவி துணை சபாநாயகராகவும் இருந்து மன்றத்தை வழிநடத்தினர்.
இந்த மாதிரி சட்டமன்றத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்தன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த விடமாட்டோம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பி.பாண்டி அதனை வழிமொழிந்தார்.
இதனையடுத்து தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. மாதிரி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்ட இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏகமனதாகவும் கரவோலி எழுப்பியும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவர்களுள் ஒருவரான இரா.விச்சலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் சி.பி.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
சிஏஏவிற்கு எதிராக விரைவில் தீர்மானம்: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர்