திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பலருக்கும் மனதிற்கு நெருக்கமான இடமாக அமைந்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நசீரா தாவூத். இவர் திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பெங்களூருவில் மருத்துவம் பயின்று, பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடித்த நசீரா, அமெரிக்காவில் மருத்துவராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற இவர் அங்குப் பொறியாளராக இருந்து வரக்கூடிய பில் என்பவரைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, தன்னுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் திருமணம் நடத்த வேண்டும் என்று நசீரா தாவூத் ஆசைப்பட்டதால், கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் மருத்துவர் நசீரா தாவூத்திற்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் பில் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த கடல் கடந்து வந்த காதல், மலையில் ஒன்று சேர்ந்தது. எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், தம்பதியினரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர். இதில் ருசிகரமான நிகழ்வாக நசீரா மற்றும் பில் இருவரும் ஜாதி, மதம், இனம் கடந்து காதலித்த நிலையில், இவர்களுடைய திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப் படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெற்றது.
மும்மதத்தைப் பறைசாற்றி, பாரம்பரியத்தைக் காப்பாற்றி, மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இத்திருமணம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. மதம், சாதியைச் சுமந்து செல்லும் சிலருக்கு மத்தியில் மும்மதத்தையும் ஒன்று சேர்த்து நடைபெற்ற இச்சம்பவம் கொடைக்கானலில் ருசிகர சம்பவமாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: கரடுமுரடான வறண்ட உதடுகளுக்கு குட்பை சொல்லுங்கள்..! வீட்டிலேயே லிப் பாம் செய்வது எப்படி?