திண்டுக்கல்: பழனி நகரின் மையப்பகுதியில் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கடந்த எட்டாம் தேதி மாலை இடைவேளையின் போது பள்ளி மாணவர்கள் ஊஞ்சல், ராட்டினம் போன்ற விளையாட்டு பொருட்களில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, விளையாடிக் கொண்டிருந்த ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் சதீஷ்குமார் ஊஞ்சலில் தவறி விழுந்ததாகவும், அப்போது தலையில் அடிபட்டு பலத்த ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் மாணவனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்காமல் மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடிக்கு தகவல் வந்ததையடுத்து, தற்போது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பழனி கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் காவல் துறையினர் பள்ளிக்கு நேரில் சென்றனர். அவர்கள் பள்ளியில் மாணவன் விளையாடிக் கொண்டிருந்த இடம் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவனை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், மாணவன் கோமா நிலைக்கு சென்றுள்ளது பழனியில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் கூறியதாவது, “மாணவர் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் ஆய்வு செய்தோம். மாணவருடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரித்தோம். காயமடைந்த மாணவர் ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்ததில் அடிபட்டுள்ளது. இது குறித்து மாணவரின் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். ஆய்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.