திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ளது ஒருத்தட்டு கிராமம். இங்கு குலோத்துங்க சோழன் காலத்தில் இராமநாதபுர மாவட்டம் ஏர்வாடி பகுதியிலிருந்து மதபோதனைகளுக்காக இடம்பெயர்ந்து வந்த மஹான் சையத் மொய்தீன்சிஸ்டி மற்றும் சையத் இஸ்மாயில்சிஸ்டி ஆகிய இரு மதகுருமார்கள் நினைவாக 700 ஆண்டுகளாக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து கந்தூரி விழாவை கொண்டாடிவருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சையத் இப்ராஹிம்பாய், வகையறாக்கள் தலைமையில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. அப்போது சஞ்சீவி மலையடிவாரத்திலுள்ள இப்ராஹிம்பாய் இல்லத்திலிருந்து மார்க்ககொடி, புனிதநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, வழிநெடுகிலும் உள்ள இந்துக்கள் வீடுகளுக்கே சென்று இனிப்புகள் வழங்கினர்.
அப்போது, இஸ்லாமியர் ஒருவர் அருள்வந்து ஆடி, ஆசிர் வழங்கினர். அப்போது மத வேறுபாடு இன்றி அனைத்து பொதுமக்களும் தண்ணீரால் காலில் தண்ணீர் ஊற்றி ஆசி பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு செய்து அனைத்து மதத்தினருக்கும் அருசுவை அன்னதானம் வழங்கினர்.
இவ்விழாவிற்கு இதே கிராமத்தை பூர்வீகமாக கொண்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய வெளி மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஒன்றுகூடி கந்தூரி விழாவில் கலந்துகொண்டு வழிபட்ட நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 46th Chennai Book Fair: 15 லட்சம் வாசகர்கள்; 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை!