திண்டுக்கலில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வில்வித்தை கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹூசைனி செய்தியாளர்களிடம் பேசுகையில் " அர்ஜுனன், துரோணர், ஏகலைவன் என வில்வித்தை வீரர்கள் சரித்திரங்களில் மட்டுமே இருந்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையில் அப்படியான வீரர்கள் இல்லை. நம் பாரம்பரிய விளையாட்டான வில்வித்தை பிரிவில் ஒலிம்பிக்கில் ஒருவர் கூட பதக்கம் வெல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆகையால் சிறந்த வில்வித்தை வீரர்களை உருவாக்குவதற்கு தமிழ்நாடு முழுவதிலுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை தயார்படுத்திவருகிறோம். குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வில்வித்தை பயிற்சி கொடுத்து வருகிறோம். இதன் மூலம் வில்வித்தை விளையாட்டு அனைத்து மக்களிடம் சென்றடையும். மேலும் நம் ஊரில் இருந்து தரமான வீரர்களை உருவாக்குவதே எங்கள் சங்கத்தின் நோக்கம்" என்றார்.