திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனத்தின் நன்கொடையுடன், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கலனை தமிழ்நாடு மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரை பி. செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நான்கரை மாதத்தில் ஐந்து கோடி தடுப்பூசிகள்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், “கரோனா காலத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்று மாதம் வேலை பார்த்து வருபவர்கள் போன்றோரை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து பணியில் அமர்த்தும்படி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தாராளமாக தடுப்பூசி கிடைத்தபோதும் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை மாதத்தில் ஐந்து கோடியே மூன்று லட்சம் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஐந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.