திண்டுக்கல்: நத்தம் பகுதியில் மதுபோதையில் சொந்த தாய், மகள், பக்கத்து வீட்டில் இருந்த முதியவரை அரிவாளால் வெட்டியதில் தாய் மற்றும் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மகள் கவலைக்கிடமான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூர் பகுதியைச் சேர்ந்தவர், ஈஸ்வரன் (45). இவருக்கு முத்துலட்சுமி என்பவருடன் திருமணம் ஆகிய நிலையில், இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளார். ஈஸ்வரன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய இவர், மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 13 வயது மகள் நதியாவை அரிவாளால் வெட்டியதில், நதியா படுகாயம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை உயிர் பிழைக்க வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து, வீட்டின் முன் உள்ள சாலையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதைக் கண்ட மனைவி முத்துலட்சுமி, அங்கிருந்தால் தன்னையும் வெட்டி விடுவார் என உயிர் தப்பி அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு ஓடி உள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையில் பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வலம் வந்த முக்கிய பிரமுகர் கைது!
மதுபோதையில் இருந்த ஈஸ்வரன் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் செல்லாயை (75) வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வீதியில் அரிவாளுடன் மதுபோதையில் சுற்றித் திரிந்த அவர், அப்பகுதியில் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெரியனாண்டி அம்பலம் (75) என்ற முதியவரையும் வெட்டியுள்ளார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த இரண்டு மாடுகளையும் அவர் வெட்டியுள்ளார். இதனால் மாடுகள் அலறி துடிக்கும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஈஸ்வரனை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த நத்தம் போலீசார், செல்லாய் மற்றும் பெரியனாண்டி அம்பலம் ஆகியோரது உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மகள் நதியாவை ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நதியா கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈஸ்வரனிடம் நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மதுபோதையில் சொந்த மகள் மற்றும் தாய், பக்கத்து வீட்டு முதியவர் என மூன்று பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.