நாடுமுழுவதும் கரோனா பீதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பின்பற்றப்பட்ட ஊரடங்கினால் வேலையின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் தாமாக முன்வந்து நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த நிவாரணங்கள் வழங்கும்போது தகுந்த இடைவெளி பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட விராலிப்பட்டி ஊராட்சி. இந்த கிராமத்தை சேர்ந்த விஜயகர், திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், இவர் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இரண்டு முறை லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியிருந்தார்.
இருப்பினும் ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதாலும், கிராமப்புறங்களில் பொதுமக்கள் வேலைவாய்ப்புகளின்றி தவிப்பதாலும், மூன்றாவது முறையாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தனது ஊராட்சியின் கீழுள்ள 13 கிராம பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதனிடையே நிவாரணப் பொருட்கள் வழங்கும்போது, பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், நெருக்கமாக வரிசைகளில் நின்று காத்திருந்தனர். மேலும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் குழந்தைகள், பெரியவர் என அனைவரும் ஒன்று சேர்ந்து நிவாரண பொருட்கள் வாங்க அலைமோதினர்.
ஏற்கனவே கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளினால் வைரஸ் தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து மக்களும், அரசியல் கட்சியினரும் செயல்பட வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.