திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டில் குள்ளம்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட வீடுகளில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு வாழும் அருந்ததியினத்தைச் சார்ந்த 42 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 1986ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் மதன குருசாமி என்ற விவசாயிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.
பின்னர் அந்த இடத்தின் உரிமையாளர் மதனகுருசாமி, ஆதிதிராவிட நலத்துறையிடமிருந்து தனது இடத்தை மீட்டுத் தரக்கோரி தொடர்ந்த வழக்கு 2006ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பின்பும் பல்வேறு சட்டச்சிக்கல்கள், நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்ததால், அம்மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்துள்ளது.
தற்போது, செம்பட்டி - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததை அடுத்து அருந்ததியின குடும்பங்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதி ஒதுக்கப்பட்ட இடத்தை வெளியூரைச் சேர்ந்த ஆதி திராவிட மக்களுக்கு ஆதி திராவிட நலத்துறை அலுவலர்கள் வழங்குவதாகக் கூறி 40க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் ஸ்டாலின் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரவேண்டும்'