திண்டுக்கல்: செம்பட்டி அடுத்த அய்யன்கோட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் திமுக மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக உள்ளார். இவர் நேற்று (ஆக. 1) இரவு தனது ஊரிலிருந்து திண்டுக்கல் சென்றுள்ளார். அப்போது, குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகே அவர் வந்துகொண்டிருந்த அரசு வாகனத்தின் இன்ஜினிலிருந்து திடீரென தீப்பொறி கிளம்பியுள்ளது.
பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் தீ காருக்குள் பரவத் தொடங்கியது. இதையடுத்து, காரிலிருந்த அனைவரும் தப்பித்து வெளியே வந்துள்ளனர். அவர்கள் வெளியே வந்த சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இச்சம்பவத்தில் பாஸ்கரன் உள்ளிட்ட காரில் பயணம் செய்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அரசு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து செம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவர் இடிப்பு