கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் அதிக அளவில் பண பயிர்களான காபி, மிளகு விவசாயம் செய்து வருகின்றனர். கீழ்மலை பகுதிகளான தான்டிக்குடி, கேசி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 7 ஆயிரம் ஹெக்டேர் காப்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் காபியின் விலை அயல் நாட்டில் தான் நிர்ணயிக்கப்படும். அதன்படி தற்போது 210 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள காபிகளை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பண பயிர்களில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகை பொறுத்தவரையில் தற்போது மிளகு அறுவடை காலம் ஆரம்பித்துள்ளது.
வழக்கமாக அறுவடை காலத்தில் 700 ரூபாய்வரை செல்லும் மிளகு தற்போது 300 ரூபாய்வரை மட்டுமே செல்வதால் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கரோனாவின் தாக்கத்தால் பண பயிர்கள் சாகுபடி செய்தும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதையும் படிங்க: அனுமதிச் சீட்டு இருந்தும் அனுமதி மறுப்பு - மேய்ச்சலின்றி சாகும் மலை மாடுகள்