திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர், பிரசன்னன். இவர் கோவை தனியார் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சுடக்கு சுழலி என்ற பிட்ஜெட் ஸ்பின்னரை இரண்டு கைகளில் சுற்றி கின்னஸ் சாதனை படைத்தார்.
ஒரு நிமிடத்தில் இரண்டு கைகளிலும் இந்த பிட்ஜெட் ஸ்பின்னரை வைத்து, 21 முறை சுழற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றார். அதன் பின்னர், இவரது கின்னஸ் சாதனை மேலும் தொடர்வதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இதே பிட்ஜெட் ஸ்பின்னர் சுழற்றுவதில் சாதனை படைப்பதற்காக பயிற்சிகள் மேற்கொண்டிருந்த இவர், ஒரு கையில் ஒரு நிமிடத்தில் 39 முறை சுழற்றி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே, இந்த போட்டியில் 35 முறை சுழற்றியதுதான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது ஒரு கையில் 39 முறை பிட்ஜெட் ஸ்பின்னரை சுழற்றி, மீண்டும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார், பிட்ஜெட் ஸ்பின்னர். இது பற்றி மாணவர் பிரசன்னன் கூறியதாவது, “2018ஆம் ஆண்டு பிட்ஜெட் ஸ்பின்னர் இரு கைகளில் சுழற்றி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தேன். அதன் பின் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டேன்.
ஒரு கையில் 35 முறை சுழற்றியதுதான் இதுவரை இந்த போட்டியில் கின்னஸ் சாதனையாக இருந்தது. இதை முறியடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் எடுத்தேன். கடந்த மார்ச் மாதம் இதற்கான போட்டிகள் கொடைக்கானல் புரையன்ட் பூங்காவில் நடத்தப்பட்டது. இதனுடைய முடிவுகள் தற்போதுதான் வெளிவந்தது.
நான் 39 முறை சுழற்றி, இந்த பிட்ஜெட் ஸ்பின்னர் போட்டியில் மீண்டும் கின்னஸ் சாதனை படைத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஊக்கமளித்த எனது பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் கரை ஒதுங்கும் 'புளு டிராகன்கள்'.. கடல் உயிரின ஆர்வலர்கள் கூறுவது என்ன?