திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று, “என் மண் என் மக்கள்” நடைபயணத்தை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி தந்தபோது திண்டுக்கல்லுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி தந்தவர் பிரதமர் மோடி. மதுரை - நத்தம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலத்தை உருவாக்கியது மோடி அரசுதான்.
திமுக அரசு தமிழக மக்களுக்காக உழைக்கவில்லை, அவரது குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே உழைக்கின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, காவல்துறையினர் கையை கட்டிப் போட்டுள்ளனர். தென் தமிழகத்தில் கடந்த 21 நாட்களில் 41 கொலை நடந்துள்ளது. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடக்கிறது.
தமிழகத்தில் சாராயத்தை பெருக்கியுள்ளார், டாஸ்மாக் கடையை நிறுத்தச்சொல்லி எனக்கு மக்கள் மனு கொடுக்கின்றனர்.
மதுபான விற்பனையால் 44 ஆயிரம் கோடி ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. மதுவிற்று தான் அரசை நடத்தவேண்டும் என்ற நிலை இல்லை. 40 சதவீத மதுபானங்கள் திமுக தலைவர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரின் கம்பெனிகளிடம் இருந்து வருகிறது. மதுக்கடையை மூடிவிட்டு, கள்ளுக்கடையை திறக்கவேண்டும் என்கிறோம்.
தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்றார் மு.க ஸ்டாலின். ஆனால் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒவ்வொருவர் மீதும் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. ஊழல் அமைச்சரவையாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை உள்ளது. திமுக அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல். பொய் வாக்குறுதிகளை சொல்லி வாக்கு வாங்கியது திமுக. 2.5 கோடி குடும்பத்தலைவிகள் உள்ள நிலையில் ஒரு கோடி நபர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்குகின்றனர். நத்தத்திற்கு என கலைக்கல்லூரி கொண்டு வருவோம், மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவருவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெர்லின் பாட்டி: 81 வயதில் ஆங்கில டீச்சராக பாடம் எடுக்கும் பாட்டியின் நெகிழ்வான கதை!