திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுக அலுவலகத்தில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார் நேற்று (செப்.19) பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பொது மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஆதலால் 144 தடை உத்தரவு என்பது இனி தேவையில்லாதது.
இந்த 144 தடை உத்தரவைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை தேர்தல் வேலை பார்க்கவிடாமல் தடுத்து வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் மட்டும் ஊர் ஊராகச் சென்று தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறார். இது எந்த விதத்தில் நியாயம்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. தற்போது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற மத்திய அரசை எதிர்க்க ஆளும் எடப்பாடி அரசுக்கு திராணி இல்லாமல் போய்விட்டது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என அறிவித்துள்ளோம். அதேபோல் தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளதா?
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே கடும் அதிகாரப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால், எங்கள் செயல்பாடுகளை மக்கள் வரவேற்கின்றனர். இந்தியாவிலேயே எதிர்க்கட்சியைப் பார்த்து பொறாமைப்படக் கூடிய ஒரே கட்சி அதிமுகதான்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ’எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 10,000 பேர் வீதம் 70 ஆயிரம் பேரை சேர்க்கும் பணி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்