திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோரை வரவேற்க திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் கொடிக் கம்பங்கள், பேனர்களை கட்சித்தொண்டர்கள் நட்டு இருந்தனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியிலும் சூறைக்காற்றுடன் மழைக்கொட்டுகிறது.
சூறைக் காற்று மற்றும் மழையில் நனைந்த பேனர் மற்றும் கொடிக்கம்பங்கள் நெடுஞ்சாலையின் குறுக்கே சரிந்து விழுவதால் விபத்து ஏற்படும் சூழல் நிலவியது. மேலும் பாதுகாப்புக்கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சூறைக் காற்றில் சரிந்து விழும் கொடிக் கம்பங்களுக்கு இடையே உயிரை கையில் பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்டிச்சென்றதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்து ஏற்படும் வகையில் பேனர் மற்றும் கொடிக் கம்பங்களை நட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை ஆய்வு மையம்