திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, வடமதுரை சத்யாநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் வடமதுரையில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 5 சிம் கார்டுகளை வாங்கியுள்ளார்.
”அந்த சிம்கார்டுகள் உங்கள் பெயரிலேயே இருக்கட்டும், வீடியோ கேம் விளையாட நான் அவற்றை பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்காக நான் உங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புகிறேன்” என்று கூறி மாதந்தோறும் ராஜேந்திரனுக்கு பணம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அந்த வடமாநில நபர், அந்த சிம்கார்டுகளை வைத்து வாட்ஸ் ஆப் கணக்குகளைத் தொடங்கி சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படம் மற்றும் தொடர்பு எண்களை எடுத்து, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அந்தப் பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா, லால் பஜார் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை மிரட்டி அந்த வடமாநில நபர் ரூ.1,50,000 வாங்கியுள்ளார். மேலும், மூன்று லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு மீண்டும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் லால் பஜார் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து, கொல்கத்தா சைபர் கிரைம் காவல்துறையினருக்குப் பிரச்சனைக்குரிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த எண்ணிற்குரியவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதைக் கண்டறிந்து வடமதுரை காவல்துறையினர் உதவியுடன் ராஜேந்திரனை கைது செய்தனர்.
மேலும், அவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்கத்தா காவல்துறையினர் ராஜேந்திரனை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி சசிகலாவிடம் கைது ஆணை பெற்று கொல்கத்தாவிற்கு அழைத்துச்சென்றனர். செல்போன் கடை உரிமையாளரை கொல்கத்தா சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல்துலக்காமல் முத்தம் கொடுத்த கணவன் - தடுத்த கோவை பெண் வெட்டிக்கொலை