திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புல்லாவெளி வனப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மாவேயிஸ்டுகள் பதுங்கியிருந்து துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து அங்கு சென்ற சிறப்பு அதிரடி படை போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சண்டையில் மாவேஸ்ட் நவீன் பிரசாத் உயிரிழந்தார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு மற்ற மாவோயிஸ்ட்டுகளான கண்ணன், காளிதாஸ் , பகத்சிங், ரீனாஜாய்ஸ் மேரி, செண்பகவல்லி, ரஞ்சித், நீலமேகம் ஆகிய ஏழு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பாக கொடைக்கானல் காவல் துறையினர் இந்திய வெடிமருந்து சட்டம், இந்திய ஆயுதப் படை சட்டம், சட்டவிரோத தடுப்பு சட்டம் உட்பட 16 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வெவ்வேறு இடங்களில் வைத்து காவல் துறையினர் ஏழு பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ரஞ்சித், நீலமேகம் ஆகிய இருவரும் பிணையில் வெளியே உள்ளனர். மற்றவர்கள் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக 67 சாட்சியங்களில் 44 பேர் மட்டுமே சாட்சி அளித்துள்ளனர். இதில் தமிழ்நாடு முன்னாள் உள்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்ட்டினும் சாட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஏகே47 துப்பாக்கி 17, மற்றும் தோட்டாக்கள் என 210 சான்று பொருட்கள் மற்றும் 33 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் வேலூர் சிறைச்சாலையில் இருந்த ரீனாஜாய்ஸ் மைரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேலும் ஜாமினில் வெளியே இருந்த ரஞ்சித் நீலமேகம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதமுள்ள நான்கு பேர் காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜமுனா குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.