கொடைக்கானல் மலைப்பகுதி என்பதால், பெரும்பாலான இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இந்நிலையில், வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் அலுவலர்கள் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூண்பாறை பின்புறம் 5 கி.மீ., தொலைவில் 1 ஏக்கர் அளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் கொடைக்கானல் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜசேகரன், சார்பு ஆய்வாளர் காதர்மைதீன், வனச்சரகர் பழனிகுமார், ஆனந்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு கஞ்சா செடிகளை தீ வைத்து அழித்தனர். இது தொடர்பாக கொடைக்கானலைச் சேர்ந்த சக்திவேல், பிரசாந்த் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி, வீரமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டெருமை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!