தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (ஜன.08) இரண்டாவது நாளாக ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூரில் தொடங்கினார். அப்போது பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி அரூர் செல்லும்போது, பி பள்ளிப்பட்டியில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தில், அன்னைக்கு மாலை அணிவித்து செல்ல கிறிஸ்தவர்கள் அழைத்துள்ளனர்.
இதனால் அப்போது மரியாதை நிமித்தமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாலை அணிவிக்கச் சென்றுள்ளார். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை முன்னிறுத்தி, நீங்கள் எங்கள் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை என கேள்வி கேட்டு, நீங்கள் மாலை அணிவிக்கக் கூடாது என இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை இளைஞர்களை சமாதானப்படுத்தியும், இளைஞர்கள் மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு இருந்த போலீசார், அண்ணாமலை மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் நான்கு பேரை அப்புறப்படுத்திய பின்னர், அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கு கூடி இருந்தவர்களில் சில இளைஞர்கள், பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மாதா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அண்ணாமலை பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி சென்றார். பள்ளிப்பட்டி பகுதியில் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தஞ்சையில் இளம்பெண் ஆணவக் கொலையா? காதல் திருமணம் செய்த இளைஞர் கூறுவதென்ன?