தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயஸ்ரீ(22) இவருக்கு ஏற்கனவே 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருத்தரித்த அவா் இரண்டு மாதமாக கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் கருவை கலைக்க பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் கடந்த 15ஆம் தேதி மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதன் பிறகு திடீரென அவருக்கு, ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு பாப்பாரப்ட்டியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் நல இணை இயக்குனர் சாந்தி, மருந்து ஆய்வாளர் சந்திரமேரி, உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாப்பாரப்பட்டி உள்ள மருந்து கடை ஒன்றில், கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக் உட்கொண்டது தெரியவந்தது.
தொடர்புடைய மருந்து கடையில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர், இதில் கருக்கலைப்பு மாத்திரை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடைக்கு சீல்வைக்கப்பட்டு, கடை உரிமையாளரான செல்வராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனா்.
விசாரணையில் செல்வராஜ் மனைவி தெய்வானை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவதும், அங்கு பணி இல்லாத நேரத்தில் தனது கணவரின் மருந்து கடையில் ஒரு பகுதியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், தெரிய வந்தது. அதன் பின் இது தொடர்பாக செல்வராஜ் மனைவி தெய்வானையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட காவலர் கைது