தர்மபுரி பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிபுரம் இடுகாட்டுப்பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி, எரிக்கப்பட்டு சடலமாக இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகத்துக்குரிய கொலைச் சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து காவல் ஆய்வாளர் வேலுதேவன், மதியழகன், யுவராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அதில், கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தவர் இண்டுர் அருகே உள்ள சோம்பட்டி பகுதியைச்சேர்ந்த மணி என்பதும் இவர் டெம்போ ஓட்டுநராக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. மணிக்கு அம்சவேணி என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மணியின் மனைவி அம்சவேணி மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அம்சவேணி தனது கணவர் மணியுடன் வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது தனது கல்லூரி நண்பரான பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷுடன் அம்சவேணிக்குத் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில், மணியைக் கொலை செய்ய முடிவு செய்த அம்சவேணி சம்பவத்திற்கு முன்தினம் சனிக்கிழமை தன் கணவருக்கு பணம் கொடுத்து குடிக்கச்சொல்லியுள்ளார், தொடர்ந்து மாலை வரை மணி மது குடித்துள்ளர். மாலை உனது நண்பர் சந்தோஷ் உன்னை அழைக்கிறார் என்று மணியை, அவரது மனைவி அம்சவேணி அனுப்பி வைத்துள்ளார்.
சந்தோஷ் அடிக்கடி வீட்டுக்கு வந்ததால் மணிக்கும் சந்தோஷுக்கும் நட்பாகியுள்ளது. இந்நிலையில், நண்பர் அழைத்ததன் பேரில் சந்தோஷைத் தேடி மணி சென்றபோது, தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்ட சந்தோஷ், தனது நண்பர் லோகேஷ் உடன் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாலை நரசிபுரம் சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று முகத்தை துணியால் கட்டி, கொலை செய்து, வாகனத்தில் இருந்த பெட்ரோலை மணியின் மீது ஊற்றி, தீ வைத்து கொளுத்தி விட்டு, அங்கிருந்து பெங்களூருக்குச் சென்றதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
கொலை தொடர்புடைய அம்சவேணி மற்றும் அவரது ஆண் நண்பர் சந்தோஷ், அவரது நண்பர் லோகேஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பென்னாகரம் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களில் துப்புத் துலங்கி குற்றவாளிகளை பென்னாகரம் காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.