தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை தகுதிநீக்கம் செய்யவும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா 200 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. அவரை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத மொழி செய்தி குறிப்பு ஒளிபரப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இதுவரை தமிழ்நாடு அரசு வாய் திறக்காமல் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி எனத் தமிழ் மொழியைச் சிதைப்பதற்கு சமஸ்கிருதத்தை முன்னிறுத்துகிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்குவதாக 2017ஆம் ஆண்டுமுதல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்; தற்போதும் சொல்லியிருக்கிறார்; இனிமேலும் சொல்வார். ஒருவேளை அவர் 2021ஆம் ஆண்டுக்கு மேல் அரசியல் கட்சித் தொடங்கலாம் என நினைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: காத்திருங்கள்; விரைவில் அறிவிக்கிறேன் - ரஜினி