தர்மபுரி: தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் இன்று தர்மபுரியில் பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'ஜனவரி 2ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தர்மபுரியில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார். பாரதிய ஜனதா கட்சி தற்போது வளர்ந்து வருகின்ற கட்சியாக உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2026 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமையும்பொழுது இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படும்’ என்றார்.
நாளை தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த கே.பி. ராமலிங்கம், 'உதயநிதி ஸ்டாலின் ஒரு இயக்கத்தின் இளைஞரணிச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர்களை அமைச்சரவையில் இடம்பெற செய்வது முதலமைச்சரின் விருப்பம். அவர் அமைச்சரவில் இடம் பெற்றிருப்பது அந்த கட்சியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், திமுகவில் உள்ளவர்கள் 100% மனதார இதயப்பூர்வமாக திமுகவின் கடைசித்தொண்டன் வரை உள்ளவர்கள் என்றால் நாங்களும் ஏற்றுக்கொள்வோம். கலைஞர் கருணாநிதி மூத்த அமைச்சர்கள் இருக்கும் பொழுது மு.க. ஸ்டாலின் அவர்களை அமைச்சராகவும், அடுத்த ஆறு மாதத்தில் துணை முதலமைச்சராகவும் ஆக்கினார். மேலும் கட்சியின் செயல் தலைவர் ஆக்கினார்.
அப்போது திமுகவினர் சகித்துக்கொண்டார்கள். ஆனால், உதயநிதி அமைச்சராவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இன்னும் எங்களுக்கு மகிழ்ச்சி தான். எப்படிப்பட்ட கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டு சென்று, அதை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஒரு ஆயுதம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துகிற பணியை பாரதிய ஜனதா கட்சி இடைவிடாமல் உழைத்து வெற்றி காணும்.
உதயநிதி செயல்படுகின்ற, பிரசாரத்தில் ஈடுபடுகின்ற ஆற்றல் உள்ள இளைஞர் எனப் பேசி வருகிறார்கள். தற்பொழுது உள்ள அமைச்சர்கள் எல்லாம் சோம்பேறிகளா? அமைச்சர்கள் எல்லாம் செயல்படாதவர்களா? முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்த அமைச்சரவை செயல்படாத அமைச்சரவையா?.
இது திராவிட ஆட்சி என்று சொல்கிறார்களே! நம்பிக்கையின் அடிப்படையில் பூஜை செய்யும் அய்யரை எழுப்புகிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரை ஏன் என்று இதுவரை கேட்கவில்லை. தேசியத்திற்கும், ஆன்மிகத்திற்கும் எதிராக செயல்படக்கூடிய ஆட்சியில் குரங்குகளில் புது குரங்கு ஒன்று நுழைந்திருக்கிறது. உதயநிதி அமைச்சராவதைப் பற்றி, நான் சொல்லுகின்ற வார்த்தை இதுதான். வாழைத் தோட்டத்திற்குள் குரங்குகள் ஆடுவது, பார்ப்பது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வெளியே வந்த பிறகுதான் அந்த தோட்டத்தின் நிலைமை தெரியவரும்.
வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தற்பொழுது தயாராகி வருகிறது. ஒருவேளை கூட்டணி சேர்ந்தால் தான் திமுகவை அழிக்க முடியும் என்ற நிலை உருவானால் அப்பொழுது அதைப் பற்றி பேசுவோம்’ என கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற மகன்: தேனியில் நடந்தது என்ன?