தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. தற்போது கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும், அதுவும் 10 ரூபாய்க்கு விற்கப்படும் பாக்கெட் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில், காவல் துறையினர் பாலக்கோடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனா். அதில், சட்டவிரோதமாக குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த பர்கத், ஹாசிம், பழனியம்மாள், இர்பான், ஜபுராராம், செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, பாலக்கோடு அருகேயுள்ள கவுண்டனூர் கிராமத்தில் சட்டவிரோதமாக, கள்ளச்சாராயம் காய்ச்சிய மூர்த்தி, சுரேஷ், தாமோதரன், சங்கர், பழனி ஆகிய ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 லிட்டர் ஊறல்களையும் 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சாலையில் புகையிலை பொருட்கள் வீசிச் சென்றவர் கைது !